தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளரும், மகளிர் அணி துணை செயலாளருமான காயத்ரி ரகுராம், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு வேட்பாளர்கள்தான் வாகன வசதி, வந்து போகும் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான டீலிங்கை உடன் வரும் மேனேஜர் நேரடியாக வேட்பாளர்களை தொடர்பு கொண்டு பேசி முடிப்பாராம். இரு நாட்களுக்கு முன்பு விழுப்புரத்திற்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காயத்ரி ரகுராம் காரில் வந்துள்ளார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் வேட்பாளர் பிரசாரம் செய்வதற்கான ஜீப் உள்ளிட்ட எந்த வாகன வசதியும் செய்து கொடுக்கவில்லையாம்.
மேலும் வந்துபோன செலவையும் கொடுக்காததால் டென்ஷனான காயத்ரிரகுராம் விழுப்புரத்தில் பிரசாரம் செய்யாமல் மேனேஜர் மூலம் டோஸ் விட்டு அடுத்த பாயிண்டான திண்டிவனத்திற்கு சென்றுவிட்டாராம். வேட்பாளர் தரப்பு நானே கஷ்டத்தில் இருக்கிறேன். பிரசார கூட்டத்திற்குகூட பணம் கொடுக்கவில்லை. அவர்களாகத் தான் வருகிறார்கள் என்றாராம். ஆனால் நட்சத்திர பேச்சாளரோ ஓசியில் எப்படி பாஸ் ஓட்டு கேட்க முடியும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
