புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாக்களித்த பிறகு தொகுதி வாரியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலவரம் குறித்து நேற்று மாலை கேட்டறிந்தார். அப்போது, வில்லியனூர் புறவழிச்சாலையிலுள்ள டீக்கடைக்கு சென்று டீ, அதிரசம் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களித்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைந்துள்ளது ஓர் காரணம். நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வரவேண்டும் என்றுதான் வாக்களிக்கிறார்கள். வாக்களிப்பு கிராமங்களில் அதிகமாக உள்ளதும் இதற்கு ஓர் காரணம். ஆட்சியமைக்கும் அளவுக்கு நாங்கள் தேர்தலில் வெல்வோம்.
கூட்டணிக்கட்சியில் பெரிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்தார்கள். நான் தான் என் கட்சிக்கு செல்ல வேண்டும். நாட்களும் குறைவாக இருந்தது. அதனால் தான் எங்கள் கட்சி தொகுதிகளுக்கு சென்றேன். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை இலக்காக வைத்துதான் நாங்கள் அனைவரும் பிரசாரம் செய்தோம். இவ்வாறு கூறினார். எதிர்க்கட்சியினர் நிதிஷ்குமாரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்கிறார்களே என்று கேட்டதற்கு, அதுபோல் ஏற்படாது. என் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று பாஜவினரே சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்வதை செய்வார்கள். ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தினோம் என்று பதில் அளித்தார்.
* சென்டிமென்ட் பைக்கில் வந்து ஓட்டு போட்டார்
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி விநாயகர் கோயில் வீதியில் முதல்வர் ரங்கசாமியின் பூர்வீக இல்லம் அமைந்துள்ளது. அதே வீதியில் 500 மீட்டர் தூரத்தில் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் அப்பகுதிக்கான வாக்குச்சாவடியும் அமைந்துள்ளது. தேர்தலின் போது, தனது வீட்டில் இருந்து, சென்டிமென்ட் பைக்கான ஆர்- எக்ஸ்-100 பைக்கில் வந்து முதல்வர் வாக்களிப்பது வழக்கம். அதன்படி இந்த தேர்தலில் நேற்று காலை 9.30 மணியளவில் தனது வாக்கை செலுத்த ஆதரவாளர்கள் புடைசூழ, பைக்கில் வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது ரங்கசாமி பைக்கில் வர முன்னே ஒரு பசு மாடு ஓடி வந்ததால் அவரது உதவியாளர்கள் பதற்றம் அடைந்தனர்.
எங்கே முதல்வரின் குறுக்கே வந்துவிடுமோ என அச்சத்தில் அதனை தடுத்து துரத்தியடித்தனர். பின்னர் வாக்குச்சாவடியின் வெளியே பைக்கை நிறுத்துவிட்டு தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார். 1990ம் ஆண்டு முதல் ஏழு முறை தேர்தலில் போட்டியிட்ட ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4 முறையும் ( 1991, 1996, 2001, 2006) 2011ம் கதிர்காமத்திலும், 2016 இந்திராநகரிலும், 2021 மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நான்கு முறை முதல்வராக பொறுப்பு வகித்த ரங்கசாமி 5வது முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
* வாக்காளர்களுக்கு ரூ.3,000 டோக்கன் தவெக தாராளம்: என்.ஆர். காங்கிரசும் ரூ.1,500க்கு கூப்பன்
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை டிரோன் மூலம் கண்காணித்ததையடுத்து ஏற்கனவே 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உழவர்கரை, மணவெளி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை டிரோன் மூலமாக கண்டுபிடித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ.11 ஆயிரத்துடன் 2 பேரை பிடித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தவெக வேட்பாளர்கள் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான டோக்கன் கொடுப்பதாக சமூக வலைத்தளத்தில் அந்த டோக்கன் வைரலானது. இதேபோல் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் டோக்கன் வழங்கி உள்ளனர். இவர்கள் எல்லாம் கட்சியின் பெயரில் டோக்கன் கொடுக்காமல் அறக்கட்டளையின் பெயர் டோக்கன்களை வழங்கி உள்ளனர். இதேபோல் புதுச்சேரி பாகூர் சட்டமன்ற தொகுதியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு அதிகாலையில் வீடு, வீடாக சென்று அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரொக்கப்பரிசு, மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாக்குப்பதிவுக்கு பின்பு வழங்குவதாக உறுதியளித்து ரூ.1,500 மதிப்பிலான பரிசு கூப்பனை விநியோகித்தனர். இதுழுற்றி தகவலறிந்த திமுக வேட்பாளர் செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தட்டிக்கேட்டதோடு டோக்கன் விநியோகத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர், திமுகவினரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனே என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் டோக்கன்களை சாலையில் வீசி எறிந்துவிட்டு தப்பியோடி விட்டனர். இதை பறிமுதல் செய்த போலீசார், டோக்கன்களை கைப்பற்றி, அதை விநியோகித்தவர்கள் யார்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரசார் வீடுவீடாக சென்று பரிசு கூப்பனை விநியோகித்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ட்ரோன் கண்டதும் ரூ.36 ஆயிரத்தை முட்புதரில் வீசி சென்ற நபர்கள்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் நெய்வாச்சேரி கிராமத்தில் குழுவாக நின்று பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படைக்கு நேற்று தகவல் வந்தது. அதன் பேரில் தேர்தல் பறக்கும்படையினர், ட்ரோன் குழுவினர் மூலமாக நெய்வாச்சேரி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில நபர்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை பார்த்த பறக்கும் படையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தபோது முட்புதரில் ரூ.36,000 கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் கொண்டு வரப்பட்டதும், பறக்கும் படையினரின் ட்ரோனை கண்டதும் முட்புதரில் வீசி சென்றதும் தெரிய வந்தது. அந்த பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் போலீசில் ஒப்படைத்தனர்.
