தர்மபுரி, மார்ச் 23: தர்மபுரி அருகே லாரியில் கஞ்சா கடத்திய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மேற்கு மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார், தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி சுங்கச்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுங்கச்சாவடி கழிவறை அருகே நீண்ட நேரமாக லாரி ஒன்று நின்றிருந்தது.
சந்தேகமடைந்த போலீசார், லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். உடனே, போலீசார் லாரியில் ஏறி சோதனையிட்டனர். அதில், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சுடலை(25), மாடசாமி(24) மற்றும் கருப்பசாமி(27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், மாற்று அடிப்படையில் ஒவ்வொருவரும் லாரியை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவுடன் லாரியை கைப்பற்றிய போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
