திருச்செந்தூர், மார்ச் 23: விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் திருவிழாக்களுக்கு இணையாக அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்ளுக்கு தேவையான வசதிகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
