லால்குடி, மார்ச் 23: புள்ளம்பாடி அருகே மேலரசூர் கிராமத்தில் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே மேலரசூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் காளியம்மன் மூப்பனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில்கள் கடந்த ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் நேற்று அந்த கோயிலில் வருஷாபிஷேகம் நேற்று நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் இரண்டு கால பூஜைகள் நடந்தது.
பின்னர் மூப்பனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், காளியம்மன் சாமிக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மேலரசூர், கல்லக்குடி, கீழரசூர், வரகுப்பை, மால்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு பொதுமக்கள் கோயில்களுக்கு மாவிளக்கு கொண்டு வந்து அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
