விகேபுரம், மார்ச் 23: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தின் கீழ் செயல்படும் பாபநாசம் வனச்சரகத்தில், சொரிமுத்து அய்யனார் கோவில் பீட்டிற்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வனச்சரகர் குணசீலன் தலைமையில் நடந்தது. இதில் கோயிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், ஆற்றில் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் மாசுபடும் பாதிப்புகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டது. மேலும், தாமிரபரணி ஆற்றின் நீராதாரத்தை பாதுகாப்பதின் அவசியம் மற்றும் ஆற்றின் தூய்மையை பேணுவதின் முக்கியத்துவம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
