சட்டமன்ற தேர்தல் எதிரொலி; டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை; பார்களில் விற்பனை செய்யவும் அனுமதி இல்லை

வேலூர், மார்ச் 23: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பார்களில் விற்பனை செய்யவும் அனுமதி இல்லை என்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மது விற்பனை, கடைகளில் மதுபானங்களின் இருப்பு ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்தாண்டு இதே கால நேரத்தில் ஒப்பிடும்போது, (மே மாதம் வரை) மது விற்பனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருந்தால், அது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக சட்டவிரோதமாக மொத்தமாக வாங்கப்பட்டதாக கருதப்படும். இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் உடனடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

அதேபோல், எந்தவொரு சில்லரை விற்பனை கடையிலும் கடந்த ஆண்டை விட 50 சதவீதத்திற்கு மேல் மதுபான இருப்பு இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 700 கடைகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி இல்லை என்றும், முறைகேடாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: