காரிமங்கலம், பிப்.16: காரிமங்கலம் அருகே விநாயகர், மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பூமாண்டஅள்ளி ஊராட்சி மோதூரில் விநாயகர், மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் அவ்வழியாக பொதுமக்கள் சென்ற போது, கோயில் கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த உண்டியல் மற்றும் உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பொம்மஅள்ளியில் 3 கோயில்களில் நகை, பணம் திருடு போன நிலையில், தற்போது 2 கோயில்களில் உண்டியல் பணம் திருடு போனது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
