ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. போர் நடந்து கொண்டிருந்த போது, எகிப்து உடனான ஒரே முக்கியமான சாலையான ரபா எல்லை பாதையை 2024ம் ஆண்டு இஸ்ரேல் மூடியது. ரபா எல்லை வழியாக ஹமாஸ் ஆயுதங்களை கடத்துவதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் ராணுவம் இதை மேற்கொண்டது. கடந்த திங்களன்று ஹமாஸ் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பிணை கைதியின் உடல் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. சர்ஜன்ட் ரன் கிவிலியின் உடல் காசா அருகே உள்ள மயானத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இதன் பிறகு ரபா எல்லை விரைவில் திறக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரபா எல்லை நாளை திறக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. போரினால் காசாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்ற பாலஸ்தீனர்கள் இந்த எல்லை வழியாக மீண்டும் காசா திரும்பலாம். எகிப்தில் முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள 30 ஆயிரம் பேர் காசா திரும்புவதற்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் காசாவில் இருந்து ரபா வழியே வெளியேறவும் ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
