டாக்கா: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி பாகிஸ்தான் உடனான நேரடி விமான சேவையை ரத்து செய்தது. அதன் பிறகு 14 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருதரப்பு வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டன.
தற்போது 14 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியது. டாக்கா மற்றும் கராச்சி நகரங்களுக்கு இடையே பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்திற்கு இரண்டு முறை, தனது சேவையை வழங்குகிறது. 162 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக விமானம் இந்திய வான்வெளிப் பகுதியை பயன்படுத்தி சுமார் 1471 மைல் தூரத்தை 3 முதல் 4 மணி நேரத்தில் கடக்கிறது. முன்னதாக துபாய் அல்லது தோஹா வழியாக 22 மணி நேரம் வரை பயணம் செய்த பயணிகளுக்கு, தற்போது 42,798 ரூபாயிலிருந்து தொடங்கும் இந்த நேரடி சேவை பெரும் கால சேமிப்பையும் வசதியையும் வழங்குகிறது.
