சான்றிதழ் வழங்க மறுத்ததால் கனடா விமானங்களுக்கு 50% வரிவிதிப்பு: வர்த்தக மோதலுக்கு மத்தியில் டிரம்ப் அதிரடி

 

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு விற்பனை செய்யப்படும் கனடா நாட்டு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியானது 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயன்றதாக கூறி அந்நாட்டின் அனைத்து பொருட்கள் மீதும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என கடந்த 24ம் தேதியன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வர்த்தக மோதலானது தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விமான போக்குவரத்து துறையிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடாவின் அனைத்து விமானங்கள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தயாரிக்கப்படும் கல்ப்ஸ்ட்ரீம் ரக விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க கனடா மறுத்ததால், அதற்கு பதிலடியாக கனடாவின் பாம்பார்டியர் மற்றும் குளோபல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரக விமானங்களுக்கான அனுமதியை அமெரிக்கா ரத்து செய்யும் என அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் உடனடியாக திருத்தம் செய்யாவிட்டால் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து விமானங்கள் மீதும் இந்த வரி உயர்வு அமலாகும்’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘டிரம்பின் இந்த அதிரடி வரி உயர்வு குறித்த பேச்சுகள் வெறும் பாசாங்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: