வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி தலைவராக கெவின் வார்ஷ்(55) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக தற்போது ஜெரோம் பவல் பதவி வகித்து வருகிறார். பவலின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளது. இதனிடையே, பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெரோம் பவல், அதிபர் டிரம்ப் சொல்வதற்காக வரியை உடனே குறைக்க முடியாது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே வரி குறைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதனால் டிரம்ப்புக்கும், பவலுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில் ஃபெடரல் வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வார்ஷை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
வார்ஷ் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மத்திய வங்கி குழுவில் உறுப்பினராக இருந்தார். பவலின் பதவிக்காலம் முடிவடையும்போது கெவின் வார்ஷ் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்பட்டிருப்பது, எஞ்சியுள்ள சில சுதந்திரமான கூட்டாட்சி நிறுவனங்களில் ஒன்றான மத்திய வங்கியின் மீது அதிக கட்டுப்பாட்டை டிரம்ப் வலியுறுத்துவதற்கான ஒரு முக்கியபடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
