வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு விற்பனை செய்யப்படும் கனடா நாட்டு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிற்கும் அதன் வடக்கு அண்டை நாடான கனடாவுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வர்த்தக மோதலானது தற்போது தீவிரமடைந்துள்ளது. சீனாவுடன் கனடா திட்டமிடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்தால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இறுதியில் அச்சுறுத்தி இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடாவின் அனைத்து விமானங்கள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் சவன்னாவில் தயாரிக்கப்படும் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோபேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்க கனடா மறுத்துவிட்டது. இதற்கு பதிலடியாக கனடாவிற்கு இந்த மிரட்டலை அதிபர் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில்,‘‘கனடாவின் பாம்பார்டியர் மற்றும் குளோபல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரக விமானங்களுக்கான சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும். அனுமதி சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் நிலைமை உடனடியாக சரிசெய்யாவிட்டால் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் கனடா மீது 50 சதவீத வரி விதிக்கப்போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் பதிவை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், கனடா அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாம்ப்பார்டியர் தெரிவித்துள்ளது.
