சென்னை: குமரிக்கடல் பகுதியில் இருந்து கேரள கடலோரப் பகுதிவரை வளி மண்டல காற்றலை வீசுவதால் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் குமரிக் கடல் பகுதியில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரையில் ஒரு கிழக்கு வளி மண்டல காற்றலை வீசிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வரைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று, சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.
