மதவாத சக்திகளோடு கூட்டணி வைத்தவர்களுக்கு சட்டசபை தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 25வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொதுக்குழுவிற்கு மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை தாங்கினார். பொருளாளர் இப்ராஹிம், மாநில துணைத்தலைவர் தாவூத் கைசர், துணைப்பொதுச்செயலாளர் அப்துர் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலத் தலைவர் அப்துல் கரீம், பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில தணிக்கைக்குழுத்தலைவர் சுலைமான் உள்ளிட்ட மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். முதல் கட்டமாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். வரஉள்ள சட்டசபை தேர்தலில் மதவாத சக்திகளோடு நேரடி கூட்டணி வைத்தவர்களும், மறைமுக கூட்டணி வைத்தவர்களும் மாபெரும் தோல்வியை தழுவக்கூடிய நிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற இந்த மண்ணிலும் சமீபகாலமாகச் சில பாசிச சக்திகள் மத வெறுப்பைப் பரப்பத் துணிந்து வருகின்றன.

இத்தகைய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கர்நாடகாவைப் பின்பற்றித் தமிழகத்திலும் ஒரு வலுவான தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழக ஆளுநர் ரவியை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாநிலச் செயலாளர் சித்திக் நன்றி கூறினார்.

Related Stories: