நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் இதுவரை 15,88,421 பேர் பயன்

சென்னை: “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்டத்தின் மூலம் இதுவரை 15,88,421 பேர் பயன்பெற்று உள்ளனர். “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஒரு ஒன்றியத்திற்கு 3 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்கின்ற வகைகளிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்கின்ற வகையிலும், 1256 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முகாம்களில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய மருத்துவம் என்று 17 வகையான மருத்துவ முறைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன் தினம் நிலவரப்படி தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள முகாம்களின் எண்ணிக்கை 1053. இதுவரை இம்முகாமில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை 15,88,421 பேர். நேற்று முன் தினம் மட்டும் 45 இடங்களில் நடைபெற்ற முகாம்களின் மூலம் பயன்பெற்ற ‘மருத்துவப் பயனாளர்களின் ’எண்ணிக்கை 63,410 ஆகும். பிப்ரவரி 2 வது வாரத்திற்குள் ஒட்டுமொத்த முகாம்களும் நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் பயன்பெற்ற விவரம்
மாவட்டம் பயனாளர்
தூத்துக்குடி 3817
சென்னை 2709
கன்னியாகுமரி 2693
திருநெல்வேலி 2439
விழுப்புரம் 2142
திண்டுக்கல் 2105

Related Stories: