வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ வாக இருப்பவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. இவர் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகின்ற தேர்தலிலும் இவரே மீண்டும் சீட் கேட்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜவின் மாநில பொதுசெயலாளரும், வேலூரின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி உட்பட கூட்டணி கட்சியினரும் சீட் கேட்டு காய் நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது.
இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சிக்காக உழைச்சு செலவு செய்யும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இந்த முறை சீட் தர வேண்டும் என்று, தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். ஆனால் இதுவரை அதற்கு கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுக்கவில்லையாம்.
புரட்சி பாரதம் கட்சியும் கூட்டணி தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கவில்லை. சீட் அவருக்கு வேண்டும் என்பதால் சீட் உறுதியானதும் தான் கூட்டணி குறித்து அறிவிப்பு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2011, 2021 ஆகிய இரண்டு முறையுமே கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்துள்ளது. அதிமுக தலைமை, இந்த முறையாவது நமது கட்சி காரனுக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் மாஜி அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் கூட்டணி தர்மத்தை பார்ப்பதா? சொந்த கட்சிக்காரனை சமாளிப்பதா? சீட்டு யாருக்கு கொடுக்குறதுன்னு தெரியாம குழப்பதில் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. இந்த தொகுதியில் ஏற்கனவே மூன்று முறை அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
