திருச்செந்தூர்: முருகன் அருளால் நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும் என்று பிரேமலதா கூறினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் கால் நனைத்து, சூரிய பகவானை வழிபட்டார். தொடர்ந்து கோயிலுக்குள் சென்று அனைத்து சன்னதியிலும் தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகை தந்தேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும், என்றார்.
தவெகவுடன் கூட்டணியா என்று கேட்டபோது, எங்களது கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ, அதன்படி நாங்கள் கூட்டணி வைப்போம். முருகன் அருளால் நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும். அந்த கூட்டணி எல்லோருக்கும் நன்மை பயக்கும் கூட்டணியாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். நல்ல கூட்டணியை நிச்சயம் அமைப்போம் என்றார்.
* ‘20 மாஜி எம்எல்ஏ தேமுதிகல இருக்காங்க’
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கிராமத்தில், தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில், தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து ஜாதி, மதம் இல்லாத 3வது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது.
தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ, அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். 2011 தேர்தலில், தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது 20 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களை காக்க வேண்டும். அதனை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
