மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர்: பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்கள் எழுப்பினார்

சென்னை: தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளினை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தமிழ்மொழித் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார். முன்னதாக தியாகிகள் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்கள் எழுப்பினார்.

மேலும், மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை, எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம்கவி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், க.கணபதி, அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

* இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது. நம் தமிழுணர்வும் சாகாது. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: