சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். விஜயின் தவெகவில் இணைந்துள்ள கு.ப.கிருஷ்ணன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், ஜெயலலிதா ஆட்சியில் 1991-1996 வரை விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
பின்னர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகினார். பின்னர் தமிழர் பூமி கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து அந்த கட்சியை கலைத்து விட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுகவில் இணைந்தார். தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணியிலிருந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருவது ஓபிஎஸ்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
