சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் 2011 தேர்தலில் போட்டியிட்டபோது, வெற்றி பெறுவதற்காக வித்தியாசமான ஒரு ஐடியாவை யோசித்தார். தேர்தலுக்கு முன் கொடுத்தால்தானே சிக்கல் என்று எண்ணியவர், வாக்காளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் கொடுக்கப்படும் எனக்கூறி, தனது அடிபொடிகள் மூலம் வீட்டுக்கு வீடு டோக்கன் கொடுத்தார். டோக்கன் பெரும்பாலானோருக்கும் விநியோகிக்கப்பட்டது.
அந்த தேர்தலில் வெற்றியும் பெற்று தமிழக அரசின் கொறடா மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார். சரி.. ஜெயிச்சுட்டாரே எப்படியும் பொருள் கைக்கு வந்து விடும் என எதிர்பார்த்த மக்களுக்கு டோக்கன் மட்டுமே மிஞ்சியது. பொருட்கள் வந்து சேரவில்லை. இதனாலேயோ என்னவோ அடுத்தடுத்து 2016, 2021 தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார்.
தொடர் தோல்விகளால் வரும் சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருப்பினும் ஒரு துண்டை போட்டு வைப்போம். கொடுத்தால் பார்க்கலாமென தலைமையிடம் சீட்டு கேட்டு வரிசையில் நிற்கிறார். இந்த முறை வாய்ப்பளித்தால், ‘வீடு தேடி வருவார்ல்ல… அப்ப டோக்கன் கொடுத்தது என்னாச்சு’ என கேட்பதற்காக மக்களும் வெயிட்டிங்கில் உள்ளனர்.
இவரின் இரட்டை மனநிலையை அறிந்த அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளரான சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியை சேர்ந்த விமல் குருசாமி, அருப்புக்கோட்டை தொகுதிக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார். கடந்த 2 வாரங்களாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 117 பேருடன் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறார்.
மேலும், சிறப்பு பூஜைகள், அன்னதானங்களும் வழங்கி வருகிறார். எப்படியாவது தனக்கு சீட் கிடைப்பது உறுதியென கோயிலிலேயே தவமாய் கிடக்கிறார். அருப்புக்கோட்டை தொகுதியில் ‘வைகை’ நதிக்காரர் பாய்வாரா? அல்லது விமல் பெயரே அமலாகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
