நாகப்பட்டினம்: இந்த சத்தம் போதாது. இன்னும், இன்னும் கொஞ்சம் சத்தமா என ‘விஜய் பாணியில்’ அவரது கட்சியினரை கிண்டல் அடித்த பஸ் பயணிகள் விசிலை வாங்க மறுத்ததால் அப்செட்டில் நிர்வாகிகள் சென்றனர். தமிழக வெற்றிக்கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அதை அறிமுகப்படுத்த நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் வெளிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று காலை 8 மணியளவில் புறப்பட முடிவு செய்தனர்.
ஆனால், உள்ளூர் கட்சி தலைவர்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்துள்ளனர். விஜய்தான் அப்படி என்றால் இவர்களுமா என தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் புறப்பட்டு பஸ் நிலையம் சென்றதும் அங்கு நின்றிருந்த பயணிகள் முன்னிலையில் விசிலை ஊதினர். பயணிகள் விசில் சத்தம் கேட்கல… இன்னும், இன்னும் கொஞ்சம் சத்தமா அடிங்க…
என விஜய் பாணியில் அவரது கட்சியினரை கிண்டல் அடித்தனர். இதில் ஒரு சில பயணிகள், யப்பா… சுவீட் கொடுப்பீங்கள் என்று பார்த்தால் ‘விசிலை’ போய் எங்கள் கையில் கொடுக்கறீங்க?… சுவீட் கொடுத்தா சாப்பிடுவோமில்ல… விசிலை வைத்து நாங்க என்ன செய்ய போறோம் என கிண்டல் அடித்தனர்… ஒரு சில பயணிகள் விசிலை வாங்கி கொண்டனர். சிலர் விசிலை திருப்பி கொடுத்தனர். இதனால் நிர்வாகிகள் கடும் அப்செட்டில் சென்றனர்.
