சென்னை: நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன், பத்ம பூஷண் விருது பெறும் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தது இல்லை.
ஆனால் நான் அவரையும், அவர் என்னையும் தூரமாக இருந்து ரசித்தும், ஒருவருக்கு ஒருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும், ஒரு ‘கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாக பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக் கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. எனது ரசிகர்கள் அவரது ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக எனது எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷண் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
