சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: நமது அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாத்து மத, சமூக, நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கிற வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவதன் மூலமே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அத்தகைய சூழல் உருவாக குடியரசு நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்: துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் இந்த அடிப்படை மதிப்புகள் பல்வேறு வகையில் சவால் விடப்படுகின்றன. பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான போக்குகள் வலுப்பெறுகின்றன. கூட்டாட்சி தத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம், கல்வி உரிமை, சம உரிமை, பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. இது நமது ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. குடிமக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய காலம் இது. ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
