எடப்பாடி கறார் அப்செட்டில் மாஜி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் 2 தொகுதிகளில் குறி வைத்து முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகளால் அதிமுக முன்னாள் அமைச்சர் புலம்பி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் சென்னையில் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிமுக கூட்டணியில் சேரும் கட்சிகளின் பட்டியல் ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை அறிந்த அதிமுக கூட்டணி கட்சியினர், நாகப்பட்டினத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் கீழ்வேளூர் தனி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட பாமக மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு முரண்டு பிடித்து வருகிறது.

அதே போல் நாகப்பட்டினம் பொது தொகுதியில் அமமுக வாய்ப்பு கேட்டு பாஜ தலைமையிடத்தில் தெரிவித்துள்ளது. இப்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்மன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகள் குறி வைப்பதால் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது ஆதரவாளர்களை எப்படி தேர்தல் களத்தில் நிற்க வைப்பது என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார்.

இதில் 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டு மற்ற 2 தொகுதிகளில் நேரடியாக அதிமுகவை நிற்க வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, எந்த எந்த தொகுதிகளில் யாரை நிற்க வைப்பது என்பது குறித்து தலைமையிடம் முடிவு செய்யும். தலைமையிடத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு உழைக்க வேண்டிய பணிகளை பார்த்தால் மட்டும் போதும் என அவரிடம் கறாராக கூறியதால் கடும் அப்செட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விரக்தியில் இருந்து வருகிறாராம்.

Related Stories: