ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கிருபாகரனுக்கு சொந்தமான விசைப்படகில் 6 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கு அருகே ஐந்து நாட்டிக்கல் தூரத்தில் இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது விசைப்படகின் அடிப்பகுதியில் திடீரென மரப்பலகை உடைந்து, கடல்நீர் புகுந்ததால் படகு மூழ்கியது. இதனால் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் அந்தோணிசாமி, கிருபாகரன், கிஷோக், செல்வம், மணி, தீன் ஆகிய 6 பேரையும், அருகில் மீன் பிடித்த மீனவர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறைக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்ததால், மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.
