வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஏழுகிணறு பகுதிகளில் ரூ.147 கோடியில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை ஓரங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரால் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ்,

கடந்த 4.12.2024 அன்று ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில், ரூ.147 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளில்” உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 415 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கூடம், படுக்கைஅறை, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென 40 குடியிருப்புகளும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பில் அங்கன்வாடி மையம், நகர்ப்புற நல வாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல்,

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மேலாண்மை இயக்குநர் வினய், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* கூடுதலாக 144 குடியிருப்புகள்
சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வளாகத்தில் 700 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. இதன் அருகில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் கூடுதலாக 144 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related Stories: