திருமணத்தின்போது உறுதியளித்த வரதட்சனையை கேட்டு கொடுமை ஆபாச வீடியோ எடுத்து கணவன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

விழுப்புரம்: திருமணத்தின் போது கொடுப்பதாக கூறிய வரதட்சணை நகையை கொடுக்காததால் ஆபாச வீடியோ எடுத்து கணவன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (30). தனியார் பள்ளிஆசிரியை. இவருக்கும் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் கார்த்திகேயன் (37) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது பெண்ணுக்கு 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண் வீட்டார் உறுதியளித்துள்ளனர். ஆனால் திருமணம் நடக்கும் போது 5 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துவிட்டு மீதமுள்ள 5 பவுன் நகையை நிலத்தை விற்று பிறகு தருவதாக கூறியுள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவர் கார்த்திகேயன் அன்று முதல் வரதட்சணை நகையை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். பிரியாங்காவின் பெற்றோர் நிலத்தை விற்பதில் சில சிக்கல் நிலவி வந்ததால் அதனை உடனடியாக விற்கமுடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனிடையே, கணவர் கார்த்திகேயன் அவரது மனைவி பிரியங்காவை அவருக்கு தெரியாமல் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து, ‘‘பாக்கியுள்ள 5 சவரன் நகையை உடனடியாக தராவிட்டால் உனது ஆபாச புகைப்படத்தை நீ பணியாற்றும் பள்ளிக்கு அனுப்பிவிடுவேன்.

இணையத்திலும் வெளியிடுவேன்’’ என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் தாய் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து பிரியங்காவை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இதுகுறித்து பிரியங்காவின் தாயார் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகளின் இறப்புக்கு காரணமான கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்ய வலியுறுத்தியும், அதுவரை பிரியங்கா உடலை வாங்கமாட்டோம் என வலியுறுத்தியும் நேற்று கண்டமங்கலம் காவல் நிலையத்தை பிரியாங்கா உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன், கண்டமங்கலம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து பிரியங்காவின் உடலை பெற்று சென்றனர்.

Related Stories: