திருச்சி: அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தென்மாவட்ட நிர்வாகிகள் விரக்தியில் உள்ளதால் அமமுக இரண்டாக உடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கியதில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கூறியதுடன் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தொடர்ந்து டிடிவி பேசி வந்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் ஓபிஎஸ்சும், டிடிவி.தினகரனும் ஒன்றாக இணைந்து எடப்பாடியை எதிர்த்து வந்தனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடிக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம் என டிடிவி பகிரங்கமாக பேசினார். அப்போது எடப்பாடி, டிடிவி ஒரு ‘420’ என வசைபாடினார். பதிலுக்கு டிடிவி, எடப்பாடி ஒரு துரோகி எனவும் கொக்கரித்தார். மேலும் துரோகத்தின் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி என டிடிவி காட்டமாகவும் தெரிவித்தார்.
இதனால், அனைவரையும் சேர்க்க நினைத்த பாஜவுக்கு பெரிய தலைவலி ஏற்பட்டது. இவர்களுக்குள் இருந்த மோதலை கண்காணித்த பாஜ தலைமை, விரைவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் இல்லையென்றால், பழைய வழக்குகள் தூசி தட்டப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பயந்து போய் தனது நிலைப்பாட்டை மாற்றிய எடப்பாடி, டிடிவி மற்றும் ஓபிஎஸ்சை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்தார். தொடர்ந்து, டெல்லிக்கு ரகசியமாக சென்று டிடிவி, அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் மிரட்டலுக்கு அடிபணிந்து சரணடைந்து விட்டார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நேற்று மீண்டும் இணைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் டிடிவி.தினகரன் மனைவி அனுராதா போட்டியிட போவதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி சேர்ந்ததால் டெல்டா, தென் மாவட்டத்தில் உள்ள அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கடும் விரக்தியில் உள்ளார்கள். தொடர்ந்து, அரசியல் ரீதியாக அடுத்த கட்ட நகர்வை நோக்கி அவர்கள் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர பல நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, அதிருப்தியில் உள்ள அமமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என அடிக்கடி கூறி வந்தார். எடப்பாடி பழனிசாமியை, தீவிரமாக டிடிவி எதிர்த்து வந்ததால் தான் அவருடன் கைகோர்த்து நின்றோம்.
ஆனால் யாரை எதிர்த்து, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்து கட்சி துவங்கினாரோ அந்த நபரிடமே டிடிவி சரணடைந்துள்ளார். முக்கிய நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இதனால் அமமுகவில் இருந்து தென், டெல்டா மாவட்ட நிர்வாகிகள் விலக முடிவு செய்துள்ளனர்’’ என்றனர்.
* கட்டாய திருமணமா காதல் திருமணமா?
பாஜ கூட்டணியில் நேற்று இணைந்த டிடிவி, தற்போது எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என பேசியுள்ளார். தொடர்ந்து அவரிடம், முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டனர். அதற்கு அவர், அதுதான் உங்களுக்கே தெரியுமே என்று மட்டும் கூறினார். பலமுறை இந்த கேள்வியை கேட்டும், எடப்பாடி பழனிசாமியின் பெயரை கடைசி வரையிலும் டிடிவி உச்சரிக்கவில்லை. இதனால், கூட்டணி இணைப்பு கட்டாய திருமணமா? அல்லது காதல் திருமணமா? என கேட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
* ஆண்டிபட்டியில் போட்டி?
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போட்டியிடுவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். அதிமுக-பாஜ கூட்டணியில் இணைவதற்கு முன்பே, தனது ‘டீம்’ மூலம் ஆண்டிபட்டி தொகுதியில் தற்போது நிலவரம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் சேகரித்து வந்துள்ளார். தொடர்ந்து, ஆண்டிபட்டியில் போட்டியிட டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார்.
