சென்னை: மறைந்த முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் மற்றும் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற முன்னாள் பேரவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்ததினர்.
அதனைத் தொடர்ந்து, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் (எ) ந.ஜெகதீசன், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், கடந்த 23.10.2025 அன்று மறைந்த 16வது சட்டமன்ற உறுப்பினரும், சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான கே.பொன்னுசாமி மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
இதனைத்தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 மணி துளிகள் எழுந்து நின்று மவுனம் காத்தனர்.
இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரவை கூட்டம் ஒத்திகைப்பட்டது. நேற்றைய பேரவை கூட்டம் 8 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. மீண்டும் சட்டபேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும். நாளை (23ம் தேதி) 2022-23ம் ஆண்டு மிகைச் செலவுக்கான மானிய கோரிக்கை, அவைக்கு அளிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதமும் தொடர்ந்து நடைபெறும். இறுதி நாளான 24ம் தேதி (சனி) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.
