இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை திமுக ஆட்சி செய்திருக்கிறது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும்: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் (லிட்டில் பிளவர் கான்வென்ட்) நூற்றாண்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: லிட்டில் பிளவர் கான்வென்ட்டுக்கும், எனக்கும் ஒரு நீண்ட நெடிய, ஆழமான உறவு இருக்கிறது. ஒருவேளை, நீங்களே அழைக்க மறந்தாலும், நான் உரிமையோடு வந்து உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன்.
ஒருமுறை இந்த பள்ளிக்கு பிறந்தநாள் கொண்டாட வந்தபோது, பெனோ ஜெபின் என்கிற மாணவியை நான் சந்தித்தேன். ‘அமெரிக்காவில் நடைபெறும் இளந்தலைவர்கள் மாநாட்டிற்கு நான் தேர்வாகியிருக்கிறேன் – நீங்கள் அமெரிக்கா செல்வதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும்’என்று ஒரு கடிதத்தை வழங்கினார். அப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

கலைஞர் முதலமைச்சர் – நான் உடனே அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு, தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, ஒரு சிறப்பு நேர்வாக, அந்த மாணவிக்காக நிதி விடுவித்து, அமெரிக்கா செல்ல உதவினோம். பின்னாளில், ஒரு பெரிய சாதனையை படைத்திருந்தார். இந்தியாவிலேயே, ஐ.எப்.எஸ்.ஆக தேர்வான முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உங்கள் பள்ளியில் படித்த சீனியர்தான். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறோம்.

பி.எச்.டி படிக்கும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை அறிவித்திருக்கிறோம். நீங்கள், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு தரும் ஆதரவால், பாராலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகள் என்று பல உலகத் தொடர்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை மேல் சாதனை படைத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில் கூட, தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியின் எம்எல்ஏ எழிலன், மகளிர் ஆணைய தலைவர் குமரி மற்றும் அன்பகம் கலை, அன்பு துரை, வி.எஸ்.ராஜ், ஆயிரம் விளக்கு தொகுதி நிர்வாகிகள், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை அருட்சகோதரி சவேரியா, முதன்மை அருட்சகோதரி ரோஸ்லைன், தாளாளர் ஜெம்மா, பள்ளி முதல்வர் பெர்பைன், தலைமை ஆசிரியை நிர்மலா ராணி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: