திருவண்ணாமலை: சட்டமன்ற மரபை மதிக்காமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், திமுக மாணவரணி மற்றும் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் தமிழ்தாய் வாழ்த்து பாடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
அப்ரபோது, ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைப்பது பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் மரபு என்பதை அறிந்தும், மாநில அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினார். ஆளுநர் இதை தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
