சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ), தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில வள மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அரசு கூடுதல் செயலாளர் சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிதாவது: மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்படும்போது கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு ஆய்வக வழி அனுபவ கற்றலை அளிக்கும் நோக்கில் மாநில வள மையம் உருவாக்கப்படும். இந்த மையத்தை ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட வழிவகை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து ரூ.5 கோடி மதிப்பில் இந்த மையம் கட்டபட்டு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறை கற்றலுக்கு தேவையாணன பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறை கற்றல் உத்திகளை காட்சிப்படுத்துவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்டவை மாநில வள மையத்தின் நோக்கம். இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் தாங்களே சோதனைகளை செய்து பாடப்பொருள் சார்ந்த கருத்துகளை கற்றுணர கற்க கசடற என்ற பெயரில்தனியே அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல், கலாச்சார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், தேசிய சர்வதேச அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாட்கள், வானியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி கருத்தரங்குகள் பயிற்சி பட்டறைகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், துறைசார் வல்லுநர்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக முன்பதிவு செய்யப்பட்ட வேலை நாட்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் வள மையத்தை நேரடியாக பார்வையிட்டு கற்றல் அனுபவம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கையின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் வெளியிடப்படும். அதற்கு பிறகு உயர் வகுப்புகளுக்கு வெளியிடப்படும். தற்போது போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பிரச்னை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
