சென்னை: தருமபுரியை சேர்ந்த எம்.சச்சிதானந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து, அதன்பிறகு பன்னோக்கு சுகாதார ஆய்வாளர் பணிக்கான 2 ஆண்டு பயிற்சியையும் நிறைவு செய்துள்ளேன். இதன்காரணமாக கோவிட் காலகட்டத்தில் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக கடந்த 2020 ஏப்.27 முதல் 2021 நவ.30 வரை பணிபுரிந்தேன்.
அதன்பிறகு தேசிய சுகாதார திட்டத்துக்கு மாற்றப்பட்டு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், ரூ.11 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்போது வரை சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான எழுத்துதேர்வு கடந்த டிசம்பர் 7ம் தேதி நடத்தப்பட்டது. அந்த தேர்வில் நானும் பங்கேற்று எழுதினேன்.
ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தேர்வு மையங்களில் வெளிப்படையாகவே மொபைல் போன் பயன்படுத்தவும், காப்பியடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது. எனவே, அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். தேர்வு நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கதிரேசன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்து இருந்தால் அதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவ பணிகள் துறை இயக்குநர், மருத்துவ சேவை பணிகளுக்கான தேர்வு வாரிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
