மதுரை: மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற அடிப்படையில் திரவுபதி – 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த மன்னரை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக படத்தின் இயக்குநர் மோகன் ஜி சித்தரித்துள்ளார். திரைப்படத்தின் சுவரொட்டிகளில் மன்னரின் பெயர் மாற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது.
இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த படத்துக்கு அவசர, அவசரமாக யூ/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. யூ/ஏ சான்றிதழை திரும்ப பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரவுபதி 2 படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும், படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ராம்சுந்தர் விஜய்ராஜ் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, ‘‘தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்.
