நித்திரவிளை, ஜன.20 : நித்திரவிளை அருகே வாவறை நெல்லிவிளை பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ்(60), எலக்ட்ரீஷியன். இவரது மூத்த மகன் அனூப் டேவிட்(30), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன்பின் அனூப் டேவிட் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் போதையில் வீட்டுக்கு வந்த அனூப் டேவிட், பொருட்களை அடித்து உடைத்து விட்டு, டேவிட் ராஜையும், அவரது மனைவியும் தாக்கி வீட்டிலிருந்து அடித்து வெளியேற்றி உள்ளார். வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட டேவிட்ராஜ் மற்றும் மனைவி தங்க இடமில்லாத காரணத்தால் நித்திரவிளை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் அனூப் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
