குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ஓமலூர், ஜன.20: ஓமலூர் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி, அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓமலூரை அடுத்த கருப்பூர் தேக்கம்பட்டி ஊராட்சி, கொல்லப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேக்கம்பட்டி ஊராட்சி செயலாளரிடம்புகார் தெரிவித்தனர். அப்போது, அவர் பொதுமக்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊராட்சி செயலாளரை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்க கோரியும் வெள்ளாளப்பட்டியிலிருந்து செங்கரடு செல்லும் சாலையில், அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊராட்சி செயலாளரை கைது செய்ய வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கருப்பூர் இன்ஸ்பெக்டர் செல்வராணி, எஸ்ஐ லலிதா மற்றும் ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: