சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

ஏற்காடு, ஜன.20: ஏற்காட்டில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஏற்காடு அருகே குண்டூர் கிராமம், நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் அரசு பஸ் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. குறிப்பாக அருகிலேயே தங்கும் விடுதிகள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்த சாலையின், இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதி அடைகின்றனர். மேலும், அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கிறது.

இதனால் குண்டூர் கிராமத்திற்கு காலை மற்றும் மாலை வேளையில் அரசு பஸ் சென்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பஸ்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவ, மாணவிகள் நடந்தே பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏற்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கந்தவேல், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து அகற்றப்பட்டும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: