தஞ்சாவூர், ஜன.20: அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 28ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கிராமத்தில் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க அமைப்பு செயலாளர் மருதமுத்து வரவேற்றார். சங்க தலைவர் குருமூர்த்தி தலைமை உரையாற்றினார். மகளிர் அணி பொருளாளர் அனீஸ் பாத்திமா வரவு செலவு அறிக்கையும், நிர்வாகிகள் கமலா, ராஜன், முனைவர் முருகேசன், சேவியர், முன்னாள் படை வீரர் மணிவண்ணன், சாமித்துரை, அருமைநாதன், சாமிநாதன், ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர்.
இக்கூட்டத்தில், வரும் 26ம் தேதி 77வது குடியரசு தின விழாவில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை கவுரவித்து விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். வளாகத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் குப்பை மேடாக காட்சியளிப்பதால் டெங்கு போன்ற நோயிலிருந்து காக்கும் நோக்கில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைத்து பூங்காக்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அடிப்படை தேவைகளான சாலை, தெரு விளக்குகள் பராமரிப்பு, குப்பைகளை சுத்தம் செய்தல், குடிநீர் ஆதாரங்களை பெருக்குதல் மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துதல் போன்ற அத்தியாவசிய பணிகளை செய்ய தவறிய உள்ளாட்சி துறையினரை கண்டித்து வரும் 28ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.
