கந்தர்வகோட்டை, ஜன.20: கந்தர்வகோட்டை பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் தஞ்சைக்கும்-புதுகைக்கும் இடையில் அமைந்து உள்ளது. கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு உள்ளவர்கள் வேலைக்கு இருபுறமும் செல்லவேண்டிய நிலையும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நகர்புறங்காளுக்கு செல்லவேண்டிய நிலையும் இருக்கிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் உள்ளூரில் இருந்தவர்கள் திங்கள்கிழமை வழக்கம் போல் பணிக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அனைவரும் ஒன்று கூடிய நிலையில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூடினர்.
இந்த நிலையில் வழக்கம்போல் வரவேண்டிய பேருந்துகள் வராததால் பணிக்கு செல்வோர்கள் பதற்றம் அடைந்தனர். சூழ்நிலைபுரிந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கந்தர்வகோட்டை கிளை மேலாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சிறப்பு பேருந்து இயக்க வேண்டுகொள் விடுத்தனர். அதன் பேரில் கிளை மேலாளர் சக்திவேல் உடனடி நடவடிக்கை எடுத்து சிறப்பு பேருந்து இயக்க உத்தரவிட்டார். இதனை பயன்படுத்தி மக்கள் பயணம் மேற்கொண்டனர். சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்த சமூக ஆர்வலர்களுக்கும், கிளை மேலாளர்க்கும் பயணிகள் நன்றி கூறினார்கள்.
