தொட்டியம் அருகே அறுவடைக்கு தயாரான ஒன்றரை ஏக்கர் நெற்பயிர் மருந்து தெளித்து அழிப்பு

தொட்டியம், ஜன.20: தொட்டியம் அருகே அறுவடைக்கு தயாரான ஒன்றரை ஏக்கர் நெற்பயிர் மர்ம நபர்கள் மருந்து தெளித்து அழித்துள்ளனர். இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அழகரை ஊராட்சி கோடியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணபதி. இவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ‘அம்மன் பொன்னி’ ரக நெல்லைச் சாகுபடி செய்திருந்தார். கடந்த நான்கு மாதங்களாகப் பிள்ளையைப் போலப் பராமரித்து வந்த பயிர், தற்போது கதிர் பிடித்து இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதியின் வயலுக்குச் சென்ற மர்ம நபர்கள், பயிர்களைக் கருகச் செய்யும் ‘எரி மருந்து’ எனப்படும் களைக்கொல்லியை ஸ்பிரேயர் மூலம் தெளித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் பச்சை பசேலென இருந்த பயிர்கள் முழுவதும் காய்ந்து நிறம் மாறிப்போனதைக் கண்டு கணபதி அதிர்ச்சி அடைந்தார். 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, விளைச்சல் மூலம் 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது மொத்த உழைப்பும் வீணாகியுள்ளது.

இதுகுறித்து விவசாயி கணபதி கண்ணீர் மல்கக் கூறும்போது, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உர மூட்டைகளைத் தலையில் சுமந்து சென்று, குடும்பத்துடன் கஷ்டப்பட்டு இந்தப் பயிரை குடும்பத்துடன் வளர்த்தோம். பொறாமை காரணமாக யாரோ விஷ மருந்தை அடித்துவிட்டார்கள். கருகிப்போன இந்தப் பயிரில் விஷத்தன்மை இருப்பதால், இதனை மாடுகளுக்குத் தீவனமாகக் கூடப் போட முடியாது. வயலிலேயே தீயிட்டு அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு எனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இச்சம்பவம் குறித்து விவசாயி கணபதி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: