புதுச்சேரி, டிச. 12: நடிகர் விஜய்யை புதிய கட்சி தொடங்கச் சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தும் அரசு நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரிப்புகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக சுகாதாரத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் தெளிவான ஒரு விளக்கத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். நடிகர் விஜய்யை கட்சி தொடங்கச் சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான். அப்படியிருக்க பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
