குன்றத்தூர், டிச.12: செம்பரம்பாக்கம் ஏரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவு நீர்வரத்து வந்துள்ளதால், முழு கொள்ளளவான 24 அடி நீரை தேக்கி, சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பி, கடல்போல் காட்சியளித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி உயரத்தில் 23.67 அடி உயரமும், மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,559 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 875 கன அடியும், நீர் வெளியேற்றும் அளவு 100 கன அடியாகவும் உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு 23.45 அடி நீரை தேக்கி வைத்ததே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஏரியின் மதகுகள், ஏரிக்கரைகள் பலத்தை கண்டறிவதற்காக மொத்த உயரம் 24 அடி நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால், சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது முழு கொள்ளளவு நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்து, சோதனை நடத்த உள்ளனர்.
