அண்ணாநகர், டிச.12: கோயம்பேடு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு உதவி ஆய்வாளர் காஞ்சனாவின் மகள் கமலயோகினி (26), காட்டுப்பாக்கம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று முன்தினம் நேர்முக தேர்வுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது அவர் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பியதாக கமலயோகினி கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கமலயோகினி கழிவறையை விட்டு எந்த ஒரு பதற்றமும் இன்றி வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவரிடம் மர்ம நபர் தாலி செயினை பறித்து செல்லவில்லை என்பது உறுதியானது. மேலும், அன்றைய தினம் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றதாக நாடகமாடியதும் அம்பலமானது. மேலும் எதற்காக தாலி செயின் பறித்ததாக பொய் புகார் அளித்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
