அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

திருவள்ளூர், டிச.12: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான ஆயத்த பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர், கலெக்டர் பிரதாப், நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் 2026க்காண தயாரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முதலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கியுள்ளது. பொது தேர்தலுக்காக வாக்குபதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணி அடுத்த பணி மிக முக்கியமான பணி ஆகும். அதற்கு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். முதல்நிலை சரிபார்ப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இப்பொழுது தான் இயந்திரங்கள் தற்பொது இவ்வியந்திரங்கள் செயல்பாடு குறித்து பெல் பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள்.

அடுத்த பொது தேர்தலுக்கு அந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தும் பணிகள் நடைபெறும். இப்பணியை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறோம். 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து இந்த பணி நடைபெறும். வாக்கு பதிவு இயந்திரம் 8,914 இயந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட் எனப்படும் வாக்கு பதிவு செய்யும் 6,614 இயந்திரங்களும், வாக்காளர் சரிபார்க்குத் காகித தணிக்கை சோதனை எனப்படும் இயந்திரம் 6,273 மொத்தமாக 21,801 இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று (நேற்று) தொடங்கி இருக்கிறது.

இது ஏறக்குறைய 25-30 நாட்கள் நடைபெற உள்ளது. பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து 13 பொறியாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் தான் இப்பணிகளை மேற்கொள்ளவார்கள். காலையில் 9 மணிக்கு தொடங்கி மாலை 6 முதல் 7 மணி வரைக்கும் இப்பணிகள் நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட 2 நபர்கள் இப்பணிகளை பார்வையிடுவார்கள். இப்பணியின்போது கைப்பேசி, எவ்வித மின்னணு பொருட்களும் எடுத்து வர அனுமதியில்லை. இப்பணி மிகவும் பாதுகாப்பாக நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படும்.

சரிபார்க்கப்பட்ட இயந்திரங்ளின் எண்ணிக்கை அன்று மாலை செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் இயந்திரங்களின் கோளாறுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு புது இயந்திரங்கள் பெறப்படும். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 35,82,226 ஆகும். இதில் 35,82,032 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், 194 படிவங்கள் மட்டும் விநியோகிக்கப்படவில்லை. பெரும்பான்மையான படிவங்கள் திரும்பவந்ததற்கான காரணங்கள் இறப்பு, வீடுகளை நிரந்தரமாக காலி செய்தல் இந்த இடங்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் 3 முறை நேரில் சென்றும் தகவல்களை பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தகவல்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி.ஸ்ரீராம், பெல் பொறியாளர்கள், திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் பி.கே.நாகராஜ், வினோத், கோபி, லட்சுமணன், பிகேஇ.நாகராஜ், லூக்கா, டேனியல், சிபிஐ மாவட்ட நிர்வாகி கஜேந்திரன் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: