சென்னை, டிச.12: சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்தல், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுதல், குப்பையை நிர்ணயிக்கப்படாத பொது இடங்களில் கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118ல் கட்டுமான பணிகளுக்காக அந்நிறுவனத்தின் சார்பில் சாலையில் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மேற்கண்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி அந்நிறுவனத்திற்கு உரிய விதிகளின்படி ரூ.5 லட்சம் அபராதத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
