கிராமப்புறங்களில் உள்ள வயல்களில் விவசாய பணியில் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவாக பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருத்தணி, டிச.12: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, கிராமப்புற வயல்களில் வடமாநிலத்தவர்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி குறைவாக வழங்கப்படுவதால், கார்த்திகை பட்டம் நடவு பணியில் அதிக அளவில் வடமாநில கூலி ஆட்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் விவசாய நிலம் பரப்பளவு குறைந்து விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. மறுபக்கம் விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காதது, இயற்கை பாதிப்பு, மகசூல் குறைந்து விடுவது, மகசூல் இருந்தாலும் போதிய விலையின்றி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டுவதில்லை. பயிர் சாகுபடியில் கூலி ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்தாலும், விவசாய பணிகளுக்கு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அரசு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தி வருவதால், பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 14 வட்டாரங்களில் நகர்புறங்களை தவிர்த்து 12 வட்டாரங்களில் பயிர்சாகுபடி நடைபெற்று வருகிறது. அம்மாவட்டத்தில் கரும்பு, நெல், நிலக்கடலை, மா, காய்கறிகள், மலர் தோட்டங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்றுப்படுகை பகுதிகளில் மூன்று போகம், மானவரியில் மழை நம்பி சிறுதானியம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு கார்த்திகை பட்டம் தொடங்கிய நிலையில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக டிராக்டர்கள் மூலம் நிலம் ஏர் உழவு செய்து, நாற்றங்கால் எடுத்து நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 62.500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உடல் உழைப்பு நிறைந்த விவசாய பணிகளை காலை முதல் மாலை வரை செய்ய வேண்டியதால், இளைஞர்கள், பெண்கள் விவசாய வேலைகளை விரும்பவதில்லை. ஆண்கள் பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். கிராமப்புற பெண்கள் பொறுத்தவரை 100 நாள் வேலைக்கு மட்டும் செல்கின்றனர். இதனால், விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில், ஏஜெண்டுகள் மூலம் மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாய கூலி ஆட்கள் அழைத்து வந்து விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவது ஒரு சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

உள்ளூர் கூலி ஆட்களுக்கு கூலி அதிகம் வேலை குறைவு என்ற நிலையிலிருந்து, மாறாக கூலி குறைவு வேலை அதிகம் செய்வதால், விவசாயிகள் முழுமையாக வடமாநில விவசாய கூலி ஆட்கள் வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநில கூலி ஆட்கள் குழுவாக வந்து ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலை செய்கின்றனர். வரிசை கட்டி நாற்று நடவு செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 5 ஏக்கர் முதல் 8 ஏக்கர் வரை நடவு செய்வதால், வேலை விரைவாக நடைபெறுவதோடு, உள்ளூர் கூலி ஆட்கள் வைத்து பணி செய்தால் ஏக்கருக்கு ரூ.10 வரை செலவு ஆவதை வட மாநில தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்தில் வேலை முடிக்கின்றனர். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கார்த்திகை பட்டம் நாற்று நடும் பணியில் அதிக அளவில் வடமாநில கூலி ஆட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு நேரடி கொள்முதல் செய்வதால் நெல் பயிர் சாகுபடியில் ஆர்வம்
கடந்த காலங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில், நெல் பயிர் சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தனியாருக்கு விற்பனை செய்ய விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். அவர்களுக்கு போதிய விலை இல்லாத நிலையில் தனியார் அரிசி ஆலைகள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விவசாயிகள் நெல் விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு உள்ளிட்ட பிற பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு முதல், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, முன்பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து அரசு கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்து உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நடப்பு நவரை பட்டத்தில் மட்டும் 62,500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருவதாக வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பயிர் சாகுபடி கணக்கெடுப்பில் குளறுபடி
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் ஒய்.வேணுகோபால் ராஜு கூறுகையில், ‘அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் டன்னுக்கு ரூ.2600 வழங்கி உடனடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவதால், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர். கரும்பு சாகுபடி குறைந்து நெல்பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வறண்ட விளை நிலங்களிலும் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், அரவை பருவத்தில், நெல் பயிர் சாகுபடி பரப்பளவு வெகுவாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பயிர் சாகுபடி தொடர்பாக வருவாய் துறை, வேளாண் துறை, புள்ளியியல் துறை இணைந்து எடுக்கும் பயிர் சாகுபடி புள்ளி விவரங்கள் முறையாக கிராமங்களில் விளை நிலங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தாமல் குறைவாக அரசுக்கு கணக்கு காட்டப்படுகிறது.

இதனால், பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள் கொடுக்கும் பயிர் சாகுபடி பரப்பளவு ஆதாரமாக நெல் கொள்முதல் நிலங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் முடித்து மூடப்பட்டதால் கடந்த பருவத்தில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் சாகுபடி குறைத்து காட்டப்படுவதால் ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் கிடைக்கும் உரம், விதை நெல் குறைத்து வழங்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்றோம். முறையாக பயிர் சாகுபடி கணக்கெடுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: