குப்பையை எரித்தபோது மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 2 பெண் தூய்மை பணியாளர்கள் படுகாயம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர், டிச.12: திருவள்ளூர் அடுத்து பேரம்பாக்கம் ஊராட்சியில் 14 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தினந்தோறும் ஊராட்சியில் உள்ள குப்பைகளை சேகரித்து பேருந்து நிலையம் அருகே வைத்து, குப்பையை கொளுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று சேகரிக்கப்பட்ட குப்பையை தூய்மை பணியாளர்கள் அஞ்சு, சத்யா ஆகிய 2 பேரும் எரித்தபோது, கிழிந்த சாக்கு பையில் இருந்து மர்ம பொருள் திடீரென தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. அப்போது, அருகிலிருந்த தூய்மை பணியாளர்கள் மீது தீப்பட்டதில் முகம் மற்றும் கை கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீக்காயத்துடன் அலறிக் கொண்டிருந்த தூய்மை பணியாளர்களை மீட்டு பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தூய்மை பணியாளர்கள் பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் வெடிகுண்டு கள்ளத்தனமாக தயாரித்து, அதனை சமூக விரோதிகள் பயன்படுத்தி அடிக்கடி எதிரிகள் மீது வீசி கொலை செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், தற்போது தூய்மை பணியாளர்கள் குப்பையில் இருந்து மர்ம பொருள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா என்ற கோணத்தில் மப்பேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: