கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்டம் விரிவாக்கம் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார் வேலூர் மாவட்டத்தில் இன்று

வேலூர், டிச.12: வேலூர் மாவட்டத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு அரசால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை 2023ம்ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாம் கட்டமாக இன்று தமிழக முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், பாராளுன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கிட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று மாலை மாலை 3 முதல் 6.30 மணி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: