வாலிபரை கொலை செய்த தம்பதி கைது

கடலூர், டிச. 12: தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசாத்(40), திருமணமாகாதவர். நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதற்கிடையே பிரசாத்தை கொலை செய்தது தொடர்பாக அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கவிப்பிரியா(30) என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து கவிப்பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது தங்கைக்கு பிரசாத் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதனால் தனது கணவர் முத்துவிடம் இது குறித்து தெரிவித்து இருவரும் பிரசாத்தை எச்சரித்துள்ளனர்.

அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கவிப்பிரியாவின் கணவர் முத்து தலைமறைவான நிலையில் நேற்று டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முத்துவும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கெடிலம் ஆற்றில் வீசப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், போலீசார் கத்தியை தேடி பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவியை கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பிரசாத்தின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: